home செய்திகள், வரலாறு ‘உறங்காப்புலி’ பி.கே.மூக்கையாத்தேவர்

‘உறங்காப்புலி’ பி.கே.மூக்கையாத்தேவர்

1923ம் வருடம் ஏப்ரல் மாதம் 4ம் நாள் கட்ட முத்துத் தேவர் – சிவனம்மாள் தம்பதியினருக்கு ஆண் குழந்து ஒன்று பிறந்தது. இதற்கு முன்னால் பிறந்த குழந்தைகள் அனைவரும் இறந்து விட்டதால் இந்தக் குழந்தையும் இறந்து விடுமோ என்ற அச்சம் இந்த தம்பதியினருக்கு இருந்தது.

இந்தக் குழந்தையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்தப் பகுதியில் தொன்று தொட்டு நிலவி வந்த பழக்கத்தின் அடிப்படையில் ஊராரிடம் பிச்சையாகப் பணம் பெற்று மூக்குத்தி வாங்கி, விழா நடத்தி பிறந்த குழந்தைக்கு மூக்கு குத்தி மூக்கையா எனப் பெயரிட்டனர். இந்தக் குழந்தை மூக்கையா தான் பின்னாளில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்த அய்யா பி.கே. மூக்கையாத்தேவர் ஆவார்.

பாப்பாபட்டியில் ஆரம்பக் கல்வியும், உசிலம்பட்டியில் உயர்நிலைக் கல்வியும் பயின்றார். 1940 ஆம் ஆண்டு மதுரைக் கல்லூரியில் சேர்ந்தார். மாணவர் மன்ற செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டதாலும், பொருளாதார நெருக்கடியாலும் கல்லூரிப் படிப்பை தொடர முடியவில்லை.

1949ம் ஆண்டு இராணி அம்மாள் என்ற மறவர்குல மங்கையை மணந்தார். இந்தத் திருமணம் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. தனது மனைவி ஆசிரியையாகப் பணிபுரிந்த தெக்கூர் கிராமத்தில் வசிக்கலானார். தனது நண்பர் வி.கே.சி. நடராஜனை சந்தித்து தனது குடும்பச் சிக்கல்கள் குறித்து ஆலோசித்தார். தனது நண்பருடன் மதுரை வந்த பொழுது பார்வர்ட் பிளாக்கின் தலைவர்களான இரகுபதித் தேவரும், காமணத் தேவரும் மூக்கையாத்தேவரை பசும்பொன் தேவர் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அவரைப் பார்த்தவுடன் இவர்தான் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு பொருத்தமான வேட்பாளர் என்று தேவர் முடிவு செய்துவிட்டார் . அவ்வாறு அரசியல் களத்திற்கு வந்தவர் தான் அய்யா மூக்கையாத்தேவர்.
தமிழக அரசியல் வரலாற்றில் அய்யா மூக்கையாத்தேவர் ஓர் அதிசயம்.
ஆம் நண்பர்களே!

1952 முதல் பொதுத் தேர்தலில் இருந்து 1979 இறக்கும் வரை தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியே அறியாமல் வெற்றி பெற்ற தலைவர் அய்யா மூக்கையாத் தேவர்.

காமராசர், அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், செயலலிதா உட்பட யாரும் படைக்க முடியாத வரலாற்றுச் சாதனையைச் செய்தவர் அய்யா மூக்கையாத் தேவர். ஒரே தொகுதியில் போட்டியிட்டு அனைத்து தேர்தல்களிலும் வென்ற பெருமை மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு. விதிவிலக்கு பசும்பொன் தேவர் அவர்கள் மட்டுமே! பசும்பொன் தேவர் அவர்களும் 1952 , 57,62 தேர்தல்களில் முதுகுளத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெறுகிறார். அவரது சீடரோ1952 முதல் 1979 வரை எவரும் அடைய முடியாத வெற்றிகளை ஈட்டுகிறார்.

1952 பெரியகுளம் சட்டமன்ற தொகுதி(அப்போது உசிலம்பட்டி தனித் தொகுதி கிடையாது).

1952- பெரியகுளம்

மூக்கையாத்தேவர் – 36,515
என்.ஆர். தியாகராஜன் – 31, 188

1957- உசிலம்பட்டி

மூக்கையாத் தேவர் – 31,631
பி.வி.ராஜ் – 11, 459

1962- உசிலம்பட்டி

மூக்கையாத்தேவர் – 47,069
தினகரசாமித்தேவர் – 22,992

1967- உசிலம்பட்டி

மூக்கையாத்தேவர் – 44,714
நல்லதம்பித்தேவர் – 16 ,225

1971 – உசிலம்பட்டி

மூக்கையாத்தேவர் – 42 , 292
ஆண்டித்தேவர் – 16, 909

1977- உசிலம்பட்டி

மூக்கையாத்தேவர் – 35,361
பொன்னையா – 1 1,422

இவை தவிர 1971ல் இராமநாதபுர நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்.

1971 – இராமநாதபுரம் – எம்.பி. தேர்தல்

மூக்கையாத்தேவர் – 2, 08,431
பாலகிருஷ்ணன் – 1 , 39, 276

மூக்கையாத் தேவர் பெற்ற வாக்குகளையும் , வாக்கு வித்தியாசத்தையும் பாருங்கள். தமிழ்நாட்டில் மிக அதிக வாக்குகள் பெற்று தொடர்ச்சியாக வென்ற பெருமை அய்யா மூக்கையாத்தேவருக்கு மட்டுமே உண்டு.

1967 ல் அண்ணா முதல்வராகப் பதவியேற்ற போது பதவிப் பிரமாணம் செய்து வைத்தவர் அய்யா மூக்கையாத்தேவர் அவர்களே.

கச்சத்தீவிற்காக நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பிய உரிமைக் குரல் மிக முக்கியமானது. அப்போது அவர் இராமநாதபுரம் எம்.பி.யாக இருந்தார். கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தத்தை மூக்கையாத் தேவர் நாடாளுமன்றத்திலே மிகக் கடுமையாக எதிர்த்தார் . அப்போது அவர் இராமநாதபுரம் எம்.பி. 26.06.1974 அன்று புதுதில்லியில் இந்திரா காந்தியும் 28.06. 1974 அன்று கொழும்புவில் ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவும் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையொன்றை நாடாளுமன்றத்தில் 2 3.07.1974 அன்று சமர்ப்பிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஸ்வரண் சிங் எழுந்த போது மூக்கையாத் தேவர் கொதித்தெழுந்தார்.

“கச்சத் தீவு என் தொகுதியில் உள்ளது. நீங்கள் ஜனநாயகம் பேசிக் கொண்டு சர்வாதிகாரி போல் நடக்கிறீர்கள். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்வு பாதிக்கப் பட்டுள்ளது. பல ஆயிரம் மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கைப் படை கச்சத்தீவு நோக்கி செல்கிறது. கச்சத்தீவு தமிழ் நாட்டின் பகுதி, இதேபோல் வட பகுதியில் பல பகுதியை அண்டை நாடுகட்குப் பூதானம் செய்து விட்டீர்கள் ” என்று கூறும் போது காங்கிரஸார் இடைமறித்தனர். “நீங்கள் துரோகிகள் ” என்று கடுமையாக சாடிவிட்டு வெளிநடப்பு செய்தார்.

1977 தமிழக சட்டமன்றத் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை திரு.எம் ஜி ஆர் அவர்கள் வாபஸ் பெறச் செய்தார். இத்தனைக்கும் வேட்பு மனுத்தாக்கல் செய்த பிறகு வாபஸ் பெறச் செய்தார். அதற்கு எம் ஜி ஆர் கூறிய காரணம் முக்கியமானதாகும். ” நீண்ட காலம் பொது வாழ்க்கையில் இருக்கும் பெருந்தலைவரான அய்யா மூக்கையாத்தேவர் அவர்கள் அண்ணாவிற்கே பதவி பிரமாணம் செய்து வைத்தவர். அப்பேர்ப்பட்ட தலைவரை எதிர்த்து என் கட்சி போட்டியிட விருப்பமில்லை” என்று வாபஸ் பெற வைத்தார்.

மூக்கையாத் தேவர் இறுதிக் காலம் வரை மதுரையில் வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார். சாகும் போது 60000 கடன் சுமையோடுதான் இறந்தார். எளிமையின் மறு உருவம் அய்யா மூக்கையாத்தேவர். அவரை அடையாளப்படுத்த நாம் தவறிவிட்டோம்.

இந்திய அளவில் சோசலிச அரசியலை முன்னெடுத்த அய்யா மூக்கையாத்தேவர்.
அவர்களின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்துவோம்.

நன்றி! …. மருதுபாண்டியன் இரா.

Share Button
Likes(0)Dislikes(0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *